கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள 107 பாடசாலைகளுக்கு போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல் உபகரணங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் வைத்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.

வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள், பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் திட்டத்தில் ஒரு கட்டமாகவே இந்த நிகழ்வு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

உபகரணங்களை வழங்கி வைத்து அலுவலர்களிடம் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ‘வீதிப் போக்குவரத்தில் ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து நடப்பதற்கு எதிர்கால நிர்வாகத்தினரான மாணவர்களுக்கு இப்பொழுதிருந்தே நடைமுறையில் பயிற்சியளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

உபகரணக் கையளிப்பு நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான எம். அன்வர், ஆர். துரைரெட்ணம், கே. கருணாகரம் மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல். அப்துல் அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.