அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பொலிஸ் அதிகாரி பலி!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பொலிஸ் அதிகாரி பலி!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 6 பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு கரோலினாவின் ஃபுளோரன்ஸ் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது வீடொன்றிலிருந்து சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

அதன்பின்னர் குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றபோதும், இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டிற்கான காரணமும் கண்டறியப்படவில்லை.

தமது மாநிலத்திற்கு இது மிகவும் துக்ககரமான செய்தியாக அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ள கரோலினா மாநில ஆளுநர் ஹென்ரி மக்மாஸ்டர், காயமடைந்தவர்கள் மீள குணமடைய பிரார்த்திப்பதாகவும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் டுவிட்டருக்கு பதிலளித்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஃபுளோரன்ஸ் மக்களுக்காகவும் பொலிஸ் அதிகாரிகளுக்காகவும் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸ் அதிகாரிகளுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடமையின் போது இதுவரை 23,408 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வருடத்தில் மாத்திரம் 112 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.