தமிழ் மொழியை விட்டுக்கொடுக்க கூடாது

கல்குடா வலய சந்திரகாந்தன் பாடசாலையின் அதிபர் கே.கதிர்காமநாதனின் வேண்டுகோளில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அப்பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் இன்று காலை அந்த பாடசாலைக்கு சென்ற அவர் இதன்போது பாடசாலையில் நடைப்பெற்ற ஒன்று கூடல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை குறித்த ஒன்றுகூடலின் போது கருத்து தெரவிக்கையில்,

மாகாணத்தால் நாம் பிரிக்கப்பட்டு இருந்தாலும் நாம் மொழி ரீதியில் ஒன்றுபட்டவர்கள். வடகிழக்கு தமிழர்களாக இருந்தாலென்ன, மலையக தமிழர்களாக இருந்தாலென்ன நாம் அனைவரும் மொழி ரீதியில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறோம்.

ஆகவே இந்த தமிழ் மொழியில் நீங்கள் பாண்டித்தியம் பெற வேண்டும். இந்த மொழியை விட்டுக்கொடுக்க கூடாது. அதற்கான முழு உரிமையும் வழங்க வேண்டும் இதன் மூலம் உங்கள் கல்வியை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது என்பதுடன் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்து இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஒரு கப்பல் கரையை சேர வேண்டுமாக இருந்தால் அந்த கப்பலுக்கு நல்ல கெப்டன் அமைய வேண்டும்.

அதே போன்று இந்த பாடசாலைக்கும் நல்ல அதிபர் கிடைத்திருக்கிறார். அதன் மூலம் நீங்கள் கல்வி கற்று நல்ல பெறுபேற்றினை அடைந்து முன்னேற வேண்டும் என இராதாகிருஸ்ணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.