பல்கிப் பெருகும் ஸ்மார்ட்போன்கள்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்கு வளர்ச்சி காணும் என்று சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது.

விசுவல் நெட்வொர்கிங் இண்டெக்ஸ் என்ற தலைப்பில் இந்தியாவின் தனிநபர் இணையப் பயன்பாடு மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்த விவரங்களை அமெரிக்காவைச் சேர்ந்த சிஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் இணையப் பயன்பாடு 2.4 ஜிகா பைட்டாக உள்ளது. அது 2022ஆம் ஆண்டில் 14 ஜிகா பைட்டாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 2017ஆம் ஆண்டுக் கணக்குப்படி, இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 404.1 மில்லியனாக உள்ளது. அது 2022ஆம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்து 829 மில்லியனாக உயரும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் டேட்டா சலுகைகள் எளிதில் கிடைப்பதால் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணையப் பயன்பாடும் உயர்ந்து வருகிறது. இணையப் பயன்பாட்டில் ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு 2017ஆம் ஆண்டில் 18 சதவிகிதத்திலிருந்து 2022ஆம் ஆண்டில் 44 சதவிகிதமாக உயரும் எனவும் சிஸ்கோ ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த வைஃபை ஹாட்ஸ்பாட்களின் எண்ணிக்கை 60 லட்சம் எனவும், சென்ற ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 27 சதவிகிதத்தினர் இணையத்தைப் பயன்படுத்தியதாகவும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.