இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

பூட்டான் அரசியல் சட்டப்படி முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் கட்சிகளுக்கு இடையே 2-வது சுற்று போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும்.

அதன்படி கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி 2-வது சுற்று தேர்தல் நடந்தது. இதில் டி.என்.டி. மற்றும் டி.பி.டி. கட்சிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மொத்தம் உள்ள 47 தொகுதிகளில் 30 தொகுதிகளை டிஎன்டி கட்சி கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் லோட்டே ஷெரிங் பிரதமராக நேற்று பதவியேற்றார்.
அவருக்கு பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நாம்கியேல் வாங்சக் பாரம்பரிய முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய பிரதமர் லோட்டே ஷெரிங் தலைமையிலான 10 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையும் பதவியேற்றது. எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.