தீர்வுக்காக அகிம்சையில் போராடுவோம்!

தீர்வுக்காக அகிம்சையில் போராடுவோம்!

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை கோரி, போராடிய பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த போதிலும் இலங்கை அரசாங்கம் தீர்வை இதுவரை முன்வைக்காதமையினால் நமது விடுதலைக் கனவுகளை மீண்டும் கண்முன் நிறுத்தி அகிம்சை வழியில் போராடுவோமென அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.

மாவீரர் நாள் தொடர்பில் அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறியுள்ளதாவது,

“விடுதலைக் கனவை இதயத்தில் தாங்கி இறப்பை தழுவிய மாவீரர்களை இன்று நாம் நெஞ்சிலிருத்தி அஞ்சலிக்கின்றோம். இம்மாவீரர்கள், நமது வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.

மாவீரர்கள் இளமையின் இனிமைகளை நிராகரித்தவர்கள். சுதந்திர தேசம் பற்றிய கனவையே தம் கண்முன்கொண்டு ஓயாது ஓடிக்கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு நாம் தலைசாய்த்து மரியாதை செய்வோம்.

இதேவேளை காலச்சுழற்சியில் நமது விடுதலைக் கனவுகள் எல்லாம் கலைந்துவிட்டதாக நாம் நினைக்கலாம். ஆனால் நமது இலட்சிய நெருப்பு ஒருபோதும் அணைந்துபோகக்கூடாது அது கனன்றுகொண்டே இருக்க வேண்டும்.

எந்தக் காரணங்களுக்காக அகிம்சைப் போராட்டமும் ஆயுதப்போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டதோ அந்தக் காரணகள் எல்லாம் இன்னமும் அப்படியே இருக்கின்றன.

தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அழித்துவிட்டோம் என்று கூறிவரும் இலங்கை அரசாங்கம் தமிழர்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க எந்ததொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இன்று ஆட்சியதிகாரத்தைப் பிடிக்க தமக்குள்ளே முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன.

போருக்குப் பின்னர் மேலெழுந்த பிரச்சினைகளான நில ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள், காணாமலாக்கப்பட்டோர் போன்றவை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.

எனவே தமிழர்களாகிய நாம் நமது விடுதலைக் கனவுகளை மீண்டும் கண்முன் வைத்து அகிம்சைப் பாதையில் தொடர்ந்தும் போராடுவோம்” என அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்துள்ளார்