இரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.0″ வெளியீட்டுக்கு தயார்!

இரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.0″ வெளியீட்டுக்கு தயார்!

லைகா புரடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நாளை (வியாழக்கிழமை) மிக பிரம்மாண்டமாக திரைக்கு வருகின்றது.

இதுகுறித்து படக்குழுவினர் ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதன்போது திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான விடயங்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

திரைப்படத்தின் கதாநாயகனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது,

“’2.0′ திரைப்படம் புதிய தொழில்நுட்பத்தில் பேசப்படும் திரைப்படமாக அமையவுள்ளது. இது 100 சதவீதம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும் என்று நம்புகின்றேன். அந்த அளவுக்கு திரைப்படத்தில் நிறையவிடயங்கள் காணப்படுகின்றன.

1975ஆம் ஆண்டு நான் நடித்த முதல் திரைப்படமான அபூர்வராகங்கள் வெளியானபோது அதை பார்க்க எனக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ, 43 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘2.0’ திரைப்படத்துக்காக அதே ஆர்வத்தோடு இருக்கிறேன்.

மேலும் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளும் உள்ளன. ‘2.0’ திரைப்பட டிரெய்லர் மற்றும் பாடல்கள், இரசிகர்களை அதிசயிக்க வைத்தன. அதேபோன்று திரைப்படமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். சினிமா துறைக்கே பெருமை ஏற்படுத்தும் திரைப்படமாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

அத்தோடு உலகம் முழுவதும் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்திலும் 4 டி ஒலியமைப்பிலும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ‘2.0’ திரைப்படம் வெளியாகவுள்ளமை விசேட அம்சமாகும்.