சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி இல்லை!

சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி இல்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லையென பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுமென சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

எனினும், அதுதொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளனவே தவிர எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லையென பஷில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி பிளவடைந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைகளின் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 20இற்கும் அதிகமான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டனர். பிரதமர மஹிந்தவும் இதில் உள்ளடக்கம்.

பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதே இதன் நோக்கமென ஒருசாரார் குறிப்பிட்டு வருகின்ற போதும், காலங்காலமாக செயற்பட்டு வந்த சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த முடியாதென்பது சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாடாக உள்ளது.

இந்நிலையில், இரண்டு கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.