இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த நாடுகடந்த அரசாங்கம் தீவிரம்.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரி நாடு கடந்த தமிழீழ செயற்பாட்டாளர்கள் கையெழுத்து சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையில் முன் மொழியவேண்டும் என்று பிரித்தானிய பாராளமன்றத்தில் ஒரு விவாதம் நடத்த வைப்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

அந்தவகையில் நேற்று முன் தினம் (27/11/2018 செவ்வாய்க்கிழமை) லண்டனில்
Royal Victoria Dock, 1 Western Gateway, London E16 1XL இல் அமைந்துள்ள ExCel மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட் ட மாவீரர் தினத்தில் கூடியிருந்த பெருமளவிலான தமிழ் மக்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி பிரச்சாரங்களை செய்து அவர்களிடமிருந்து கையெழுத்துக்களை பெற்றிருந்தார்கள்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக புரியப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் போர்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றே இக்கையெழுத்து வேட்டையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பேணுதல் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயங்களை மேம்படுத்துதல் தொடர்பாக செப்டம்பர் 2015 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையில் கொண்டுவரப்படட 30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக நிறைவேற்றுவோம் என ஐ நா மனித உரிமைச்சபைக்கும் அதன் அங்கத்துவ நாடுகளுக்கும் வாக்குறுதியளித்திருந்தது.

வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் பின்னிற்கின்றது. வழங்கப்படட காலத்திற்குள் எந்தவொரு முன்னேற்றகரமான முயற்சியையும் எடுக்கவில்லை.

கடந்த வருடம் மார்ச் மாதம் ஐ நா மனித உரிமைச்சபையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் 2வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.

பொறுப்பு கூறல் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு நீதிப்பொறி முறையை( Hybrid Court) உள்நாட்டில் உருவாக்க தவறிவிட்டது.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை ,
இலங்கை இராணுவம் தம்வசம் கைப்பற்றி வைத்திருக்கின்ற தமிழர்களது காணிகள் முழுமையாக அவர்களிடம் திருப்பி கொடுக்கப்படவில்லை ,அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை , காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் உண்மைகளைக்கண்டறிதல் தொடர்பில் விருப்பம் காட்டாமையும் பின்னிற்கின்ற நிலைமையும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் அரசுத் தலைவரும் தலைமை அமைச்சரும் மனித உரிமைப் பேரவைக்குத் தாங்களே அளித்த உறுதிகளைத் திரும்பத் திரும்ப மறுதலித்துள்ளார்கள், வெளிப்படையாகவே மறுதலித்துள்ளார்கள்.
சிறிலங்காவின் அதிபர் தலைவர் மைத்ரிபால சிறிசேனா அல் ஜசீரா செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 2009ம் ஆண்டு அப்பாவித் தமிழ்மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசுப் படைகள் போர்க்குற்றமே செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

நவம்பர் 11 2017ல் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் 350 இராணுவீரர்கள் முன்னிலையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மைத்திரிபால கூறுகையில் ‘சில குழப்பம் அடைந்த அரசியல்வாதிகளும், சில இழைப்பாறிய இராணுவ அதிகாரிகளும் போர் கதாநாயகர்களும் விசாரித்து தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றனர்.இந்த நாட்டு அதிபர் என்ற வகையில் வெளிநாட்டு நீதிபதிகளின் முன் எவரையும் விசாரணக்கு இட்டுச் செல்லப் போவதில்லை என கூறியுள்ளார்.

இவ்வாறு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் உண்மைகளை மறுத்து உலகை ஏமாற்றும் போக்கைக் காட்டியுள்ள நிலையில் சிறிலங்காவை மனித உரிமைப் பேரவையின் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது மனித உரிமை தொடர்பில் அந்நாடு எவ்வளவு கொடிய வரலாறும் நிலைப்பாடும் கொண்டுள்ளது என்பதைத் தொடர்ந்து வெளிச்சத்தில் வைத்திருக்கும் என்பது மெய்தான். ஆனால் பாதிப்புற்றோருக்கு நீதி கிடைக்க இது வழிகோலாது.

யுத்த காலத்தின் போது தமிழ் மக்கள் மீது புரியப்படட மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல் நீதி வழங்கல் விடயத்தில் சிங்கள பௌத்த பேரினவாதமிடமிருந்து தமிழ் மக்கள் எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை.

எனவே தான் எதிர்வரும் மார்ச் 2019 இல் ஐ நா மனித உரிமைச்சபையின் கூட்டதொடரில் இலங்கை விவகாரத்தை ஐ நா பொதுசபைக்கு (UN General Assembly) அனுப்பி அங்கிருந்து பாதுகாப்பு சபைக்கு (Security Council) அனுப்பி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேன்டும் என்ற ஒரு தீர்மானத்தை பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என்றே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இக் கையெழுத்து மனுவை பிரித்தானிய பாராளமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் ஆரம்பித்திருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக புரியப்பட்ட பாரியளவிலான படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் மானிடத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக ஐ நா மனித உரிமைச்சபையில் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தையும் 34/1 கூட்டாக முன்மொழிந்த நாடுகளில் ஒன்று என்ற முறையிலும் ஐ நா பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பு நாடு என்ற வகையிலும் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் இனவழிப்பு மற்றும் தொகையான கொடூரங்களுக்கெதிரான அமைச்சினாலேயே இந்த கையெழுத்து சேகரிப்பு முன்னெடுத்து நடாத்தப்படுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் திரு பத்மநாபன் மணிவண்ணனின் தலைமையில் இக் campaign இற்கான தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகிய செல்வி சோபனா ஜீவரட்ணத்தின் ஒருங்கிணைப்பில் இக் கையெழுத்து சேகரிப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் புண்ணியமூர்த்தி ஜெயதீபன் ,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான செல்வராஜா உமாகாந்த் ,சஞ்ஜீவ் குகதாசன் ஆகியோர் மிகத்தீவிரமாக கையெழுத்து சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.