இரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு! கூட்டமைப்பினரின் பங்கேற்பு சந்தேகம்!

இரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு! கூட்டமைப்பினரின் பங்கேற்பு சந்தேகம்!

அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளம் வான் கதவுகளை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில கலந்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் இன்றைய விஜயம் அமையவுள்ளது.

ஜனாதிபதியுடன் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், நாட்டில் அரசியல் குழப்பம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்வது சந்தேகம் எனத் தொிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் அவதானித்திருந்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.