துருபிடித்த கொள்கலனில் சமையல் எண்ணை ஒரு இலட்சத்தி பத்து ஆயிரம் ரூபா தண்டம்

விநியோகம் மற்றும் உணவுப் பொருட்களுக்கு சுற்றுத்துண்டு ஒழுங்கு விதிகளுக்கு எதிராக பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் என்பன வாகனத்தில் எடுத்துச்சென்று வியாபார நிலையங்களுக்கு விநியோகித்து வந்த விமுகவருக்கு இன்று வவுனியா நீதிமன்றம் ஒரு இலட்சத்தி பத்து ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் பிரபல்யமான சமையல் எண்ணை விநியோகஸ்தர் ஒருவர் தனக்குச் சொந்தமான பாரஊர்த்தி ஒன்றில் துருப்பிடித்த நிலையிலிருந்த கொள்கலன் மற்றும் இயந்திர ஒயில் எஞ்சின் பரல் என்பனவற்றில் சமையலுக்குப்பயன்படுத்தும் எண்ணையை களஞ்சியப்படுத்தி விநியோகம் மேற்கொண்டு வந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க.சிவரஞ்சன் தனது வழமையான பரிசோதனை நடவடிக்கையின்போது ஓமந்தைப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் பார ஊர்த்தியை வழிமறித்து பரிசோதனைக்குட்படுத்தியபோது வாகனங்களுக்கு இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் எஞ்சின் எண்ணை அடைக்கப்பயன்படுத்தப்படும் 210லீற்றர் பரல் மற்றும் துருப்பிடித்த 800லீற்றர் கொள்கலனில் சமையலுக்குப்பயன்படுத்தப்படும் எண்ணையை களஞ்சியப்படுத்தி விற்பனைக்கு எடுத்துவரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்துஅவற்றை கைப்பற்றியதுடன் மேலும் பாரஊர்த்தியில் எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்களுக்கு சுற்றுத்துண்டு ஒழுங்கு விதிகளுக்கு எதிராக பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து குறித்த விநியோகஸ்தர் மற்றும் உற்பத்தியாளருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் ஓமந்தை பொது சுகாதாரப்பாசோதகரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிராளி குற்றத்தை ஏற்றுக்கொண்டதற்கு இணங்க 3 வழக்குகளுக்கும் ஒரு இலட்சத்தி பத்து ஆயிரம் ரூபா நீதிமன்றத்தினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிக்பிடத்தக்கது.