நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய ஒன்றுகூடல் – பிரித்தானியாவில்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது அரசவைக் காலத்துக்கான தேர்தலை நடாத்தும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் கருத்துப் பகிர்வு நிகழ்வு பிரித்தானியாவில் 29ம் திகதி டிசம்பர் 2018 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மதிப்பிற்குரிய வி. உருத்திரகுமாரன், தலைமைத் தேர்தல் ஆணையாளர் திரு பொன் பாலராஜன் மற்றும் பிரித்தானியாவுக்கான தேர்தல் ஆணையாளர் திரு சிதம்பரம்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

தொலைத்தொடர்பு மூலம் நிகழ்வில் இணைந்து கொண்ட பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அவர்கள் பதிலளிக்கையில், தேர்தல் ஆணையம் முற்றிலும் சுயாதீனமாக இயங்கி வருகிறது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் உறுப்பினர்கள் எவரினதும் தலையீடு இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் ஊழல் புரிந்த அரசவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தவறு செய்த அரசவை உறுப்பினர் குறித்து நெறிமுறை ஆணையத்துக்குத் தெரியப்படுத்துதல் மற்றும் தொகுதி மக்கள் ஒன்றிணைந்து அரசவை உறுப்பினரை திரும்ப அழைத்தல் என இரு வழிகளில் பொது மக்கள் குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெளிவுபடுத்தினார்.

தேர்தல் வேட்பாளர்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த திரு சிதம்பரப்பிள்ளை அவர்கள், குறிப்பிட்ட ஒரு தொகுதியைச் சேர்ந்த எவரும் வேட்பாளராகப் போட்டியிட முன்வராதவிடத்து, அப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரோ அல்லது வேறு ஒரு தொகுதியைச் சேர்ந்த ஒருவரோ தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர் என தேர்தல் கையேட்டினை (7.1.2) மேற்கோள் காட்டி விளக்கமளித்தார்.

இக் கருத்துப்பகிர்வின் போது 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
தேர்தல் வேட்பாளர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அரசவை உறுப்பினர்கள், பெண்கள், இளையோர் மற்றும் புதியவர்கள் என நான்கு பிரிவுகளுக்குட்படுத்தப்படுவர். பெண்கள் மற்றும் இளையோரிடம் குறைவான கட்டணம் அறவிடப்படும். வாக்காளர்கள் ஒரு பிரிவில் ஒருவருக்கு மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க இயலாதோர் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். மேலும் குறித்த தொகுதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இன்றி பொதுமக்கள் நாடளாவிய ரீதியில் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க முடியும்.

நிகழ்வின் இறுதியில் வேட்பாளர்களுக்கான முற்பதிவுப் படிவம் வழங்கப்பட்டது.