நியாயமான விடயங்களுக்கு புலம்பெயர் சமூகம் ஆதரவளிக்கும்!

நியாயமான அதிகார பகிர்வு போன்ற விடயங்களில் பெரும்பான்மை புலம்பெயர் சமூகமே ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஒர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று(புதன் கிழமை) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகத்தினர் மிக சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர் என்றும் இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைக்கு பெரும்பான்மை புலம்பெயர் சமூகம் தமது ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.