மன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பனக்கட்டுகொட்டு, எமினார் போன்ற பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களாக 156 பேர் இனங்காணப்பட்டனர்.

இவ்வெண்ணிக்கை கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது குறைவாக காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகமாகவே உள்ளது.

எனினும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்

இதேவேளை, காய்ச்சல் ஏற்படும் போது மக்கள் தவறாது பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமெனவும், மருத்துவ ஆலோசனையற்ற மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.