சசிகலாவுக்கு சபரிமலை கோவிலில் அனுமதி மறுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததை அடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஏராளமானோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையைச் சேர்ந்த 46 வயது பெண் பக்தை சசிகலா தன் கணவருடன் வந்து நேற்று இரவு 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.

ஆனால் அவர் 18 படி மட்டுமே ஏறியதாகவும், தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சசிகலா இதுபற்றி கூறுகையில், “நான் ஐயப்ப பக்தை. முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன். நான் என்னுடைய கர்ப்பப் பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்துவிட்டேன்.

அதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் இருக்கிறது. ஆனாலும், என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். 18 படிகள் மட்டுமே ஏறினேன், சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை” என்றார்.

ஆனால், அவர் ஐயப்பனை நிச்சயம் தரிசனம் செய்திருப்பார் என பொலிஸார் கூறுகின்றனர்.

இதேபோல் சபரிமலை கோயிலுக்கு சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக கோயிலில் வழிபடாமல் பம்பையில் இருந்து திரும்பி சென்றுள்ளார்.