மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு! சிலருக்கு நடவடிக்கை, பலருக்கு எச்சரிக்கை!

மட்டக்களப்பு – கோட்டைமுனை பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பாவனைக்கு உதவாத பெருமளவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் பாதுகாப்பு கருதி நேற்றைய தினம் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதனின் ஆலோசனையின் கீழ் கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தலைமையிலான குழுக்கள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இதன்போது மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பின் போது பெருமளவான காலாவதியான பொருட்கள், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் முறையான வகையில் சுற்று துண்டுகள் இடாத பொருட்கள் என்பனவற்றினை கைப்பற்றியுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனடிப்படையில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதுடன், சில வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.