ஊழலினாலேயே காங்கிரஸ் ஆட்சியை இழந்தது!

போபர்ஸ் தான் ஊழல், அந்த ஊழலால் அப்போது ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி பதவியை இழந்தார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.

காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விமானத்தை வாங்க விரும்பவில்லை.

பணம் கிடைக்காது என தெரிந்ததால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளி இந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை.

நாட்டின் பாதுகாப்புக்கு பாஜக அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஒப்பந்தம், பேச்சுவார்த்தை என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் தயாராகும். விமானம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வந்து சேரும்.

ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. இராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

போபர்ஸ் தான் ஊழல், அந்த ஊழலால் அப்போது ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை இழந்தார்.

ஆனால், ரஃபேல் நாட்டின் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், ரஃபேல் ஒப்பந்தம் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும்“ என தெரிவித்துள்ளார்.