தனி ஒருவராக போராடினார் அமைச்சர் மனோ கணேசன்!

கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுத்து வரும் ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் நலன் கருதியே தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் புரிந்துணர்வு அடிப்படையில் இணக்கப்பாட்டு அரசியலை நடத்தி வருவதாக முன்னணியின் பிரதித் தலைவர் வேலு குமார் எம்.பி. தெரிவித்தார்..

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட கிளைக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜனநாயக மக்கள் முன்னணி கடந்துவந்த ‘அரசியல் பாதை’ என்பது மலர் தூவிய பட்டுப் பாதை கிடையாது. கற்களும், முற்களும் நிறைந்த வழியிலேயே தலைவரின் தற்துணிவான வழிகாட்டலுடன், சவால்களை முறியடித்து நாம் வீறுநடை போட்டோம்.

தற்போது தம்மை தமிழ் இனத்தின் காவலாளியாக காட்டிக்கொள்பவர்கள் போர் காலத்தில் கொழும்பில் வீட்டுக்குள் முடங்கியிருந்தனர். ஆனால், தலைநகரில் தமிழ் பேசும் மக்களுக்காக தனி ஒருவராக போராடினார் அமைச்சர் மனோகணேசன்.

கட்சியின் போராளிகளும் அவரின் கரங்களைப் பலப்படுத்தினார்கள்.அதுமட்டுமல்ல கண்டி மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் அன்று வீதிக்கு இறங்கவே அஞ்சினர்.

இந்த நிலைமையையும் எமது ஜனநாயக மக்கள் முன்னணி மாற்றியமைத்தது. இன்று பலரும் வீதிக்கு இறங்கி போராடுவதற்கான களத்தை நாமே அமைத்துக்கொடுத்தோம்.

எனவே, இத்தகையதொரு மக்களுக்கான, கொள்கை ரீதியான, விலைபோகாத கட்சியை பலப்படுத்த வேண்டியது எமது பாரிய கடப்பாடாகும். கண்டி மாவட்டம் முழுவதும் எமது குரல் விண்ணதிர முழங்கவேண்டும்.

அதற்காக கட்சி தொண்டவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அதேபோல் எமது கட்சி இனவாதத்தையோ அல்லது மதவாதத்தையோ முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சி கிடையாது.

மக்களுக்கான அரசியலையே கொள்கை ரீதியாக முன்னெடுத்து வருகின்றது. எங்கு அநீதி அரங்கேறினாலும் அங்கு நீதியின் குரலாக நாம் நிற்போம்.

போர் மௌனிக்கப்பட்டாலும், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சமரிலிருந்து நாம் இன்னும் பின்வாங்கவில்லை. இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்க பலமாக இருந்து வருகின்றோம்.

தீர்வு பயணம் வெற்றி பெருவதற்காக தென்னிலங்கை அரசியல் சக்திகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றோம். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தெளிவாக புரியும். எம்மிடையே புரிந்துணர்வு இருக்கின்றது.

வடக்கில் தேர்தல் நடைபெற்றால் கடந்த காலங்களில் கூட்டமைப்புக்கு ஆதரவாக எமது தலைவர் அங்கு சென்று பிரசாரம் செய்வார்.

தலைநகரில் எமக்கு ஆதரவாக கூட்டமைப்பு பிரசாரம் செய்யும். இவ்வாறு எமக்கிடையிலான உறவு ஏதோவொரு விதத்தில் நீடித்து நிலைக்கின்றது.

அதே போல் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் கட்சிகளுடனும் நாம் உறவு வைத்துள்ளோம். பொதுவான நோக்கம் மக்களை மையப்படுத்தியதெனில் கரம்கோர்த்து செயற்படுவதில் தவறு கிடையாது.

காரணம் எமது பயணமும் மக்கள் நலன் கொண்டதாகும். இதற்காக பல விட்டுக்கொடுப்புகளையும் நாம் செய்துள்ளோம். செய்துவருகின்றோம்.

இதை எவராவது எமது பலவீனமாக கருதி அரசியல் குளிர்காய முற்பட்டால் அது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே அமையும்.’’ என்றும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.