மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பில் முடிவு!

மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பாக அரசாங்கம் இந்த வாரம் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை நிர்வகிக்க இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்னர் எடுக்கப்பட்ட முடிவை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லுமா என ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய பிரத்தியேக கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர் “முன்னதாக, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இதுதொடர்பாக முன்வைக்கப்பட்ட திட்டம் குறித்து பரிசீலனை செய்து வருகின்றோம், ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமருடன் இணைந்து, இது குறித்த ஒரு முடிவை எடுப்பார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2013 மார்ச் மாதம் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்பட்ட குறித்த விமான நிலையம், பின்னர் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்து இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வைத்து தொடர்பில் முடிவு செய்யப்பட்டது. இருந்தபோதும் அதன் பேச்சுவார்த்தைகள் பின்னர் இடைநிறுத்தப்பட்டன.

மேலும் மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு இறுதியாக டுபாய் விமான நிறுவனம் வர்த்தக விமான பயணத்தை மேற்கொண்ட போதும் அது பின்னர் இடைநிறுத்தப்பட்டது.

குறித்த விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிக்காக 210 மில்லியன் ரூபாய் மேலதிகமாக தேவை ஏற்பட்ட காரணத்தினாலேயே அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.