கூட்டமைப்பு ஒத்துழைக்காவிட்டாலும் தமிழர்கள் தமக்கு ஒத்துழைப்பார்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், தமிழர்கள் தமக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவார்களென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“கிளிநொச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு நிவாரணங்கள் வழங்க பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர்.

நாமும் பொதுஜன பெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளோம். மக்களுக்கு பயனுள்ள ஏதேனும் செயற்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்றே நாம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

நாம்தான் மீள்குடியேற்றத்தை அதிகமாக மேற்கொண்டுள்ளோம். 6 மாதங்களிலேயே கன்னி வெடிகளை அகற்றி, மக்களை குடியேற்றினோம்.

கன்னி வெடிகளை அகற்றி, அந்தக் காணிகளை விவசாய நிலங்களாக மாற்றினோம். விவசாயம், மீன்பிடித்துறை என்பனவற்றை ஒரு வருடத்திலேயே அபிவிருத்தி செய்தோம்.

மேலும், யாழ்தேவியை மீண்டும் ஆரம்பித்தோம். மின்சாரம், வீதி, குளங்கள் உள்ளிட்ட வசதிகளையும் நாம் வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தின் ஊடாக மேற்கொண்டோம். இதில் எஞ்சியுள்ளவற்றை செய்யத்தான் தற்போதுள்ளவர்களால் முடியாதுள்ளது.

எல்லாவற்றையும் உடனடியாக செய்து முடிக்க முடியாது. இந்த குறையை நாம் அடுத்தமுறை வரும்போது இல்லாது நிவர்த்தி செய்வோம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காவிட்டால் கூட, தமிழர்கள் எமக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

எமது குறைகளை நாம் எதிர்க்காலத்தில் இல்லாது செய்வோம். இதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கிறது.

பொதுஜன பெரமுன என்பது புதியக் கட்சியாகும். நாம் அனைவரும் குறைகளை நிவர்த்தி செய்து முன்னோக்கி செல்ல வேண்டும். “ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.