ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த மஹிந்தவுடன் இணைவோம்!

மைத்திரி- மஹிந்த- சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றில் இன்று பெரும்பான்மையல்லாத ஒரு அரசாங்கமே இருக்கிறது. இதில் அனைவரும் அதிகாரத்துக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவர்கள் பல்வேறு வழிகளில் செயற்படுகிறார்கள். இதனாலேயே அவர்களுக்கு மக்களின் பிரச்சினை தொடர்பில் ஞாபகமில்லாமல் இருக்கிறது.

இதிலிருந்து மீள வேண்டுமாக இருந்தால், பொதுத் தேர்தலுக்கு சென்றே ஆக வேண்டும். ஸ்திரமில்லாத அரசாங்கத்தால் இனியும் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது.

இதனால், பொது மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க தேர்தலொன்றுக்கு சென்றே ஆக வேண்டும்” என தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.