ஐ.தே.க.விற்கு சந்திரிகா இனிமேல் ஆதரவளிக்கமாட்டார்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதாகக் கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், வெற்றிகரமாக இல்லாத காரணத்தினால் தான் ஜனாதிபதி கடந்த காலங்களில் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டார்.

எனவே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த முயல மாட்டார் என்றே நினைக்கிறோம்.

அவர் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் என்பதோடு, நாட்டின் சிறந்த அரசியல் தலைவராகவும் அவர் இருக்கிறார். கருத்துக்களில் சில முரண்பாடுகள் இருக்கலாம். இவருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ஆனால், இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த எவரும் முயற்சிக்கக்கூடாது என்பதே எமது கருத்தாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.