ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10ஆம் ஆண்டு நினைவுதினம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

பேனையால் சவால் விடுத்தவர், கடந்த ஆட்சியாளர்களால் ஆயுதத்தால் மௌனிக்கப்பட்டார்.

அவரது நினைவுதினம் பொரளை கனத்தை மயானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மிகவும் உணர்வுபூர்மாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதில், லசந்தவின் உறவினர்கள், பெருமளவான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரம, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அன்னாரின் கல்லறைக்கு மலர்தூவி அஞ்சலி செலத்தப்பட்டதோடு, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்தோடு, இலங்கையில் இதுவரை படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சிட்டைகளை வைத்து அவர்களும் நினைவுகூரப்பட்டனர்.

1994ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையை ஸ்தாபித்த லசந்த விக்ரமதுங்க, மிக இளம் வயதில் சன் பத்திரிகைச் செய்தியாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்தவர்.

1982ஆம் ஆண்டு தி ஐலண்ட் பத்திரிகையில் இணைந்த லசந்த, 1994ஆம் ஆண்டு ஆரம்பித்த சண்டே லீடர் மூலம் அன்றைய மஹிந்த தலைமையிலான ஆட்சியாளர்களை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

கடந்த ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்த லசந்தவிற்கு பலமுறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தது.
அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆயுத ஊழல் தொடர்பாக நீதிமன்றில் சாட்சியம் வழங்க தயாராக இருந்த லசந்த, குறித்த சாட்சிய தினத்திற்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது துணிச்சல்மிக்க பணிக்கு சாவுமணி அடிக்கப்பட்டு இன்றுடன் ஒரு தசாப்தம் முடிவடைகின்ற போதும், அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவருகின்றனர். லசந்த உள்ளிட்ட கடந்த காலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கும் நீதியே, இலங்கையின் ஊடக சுதந்திரத்தையும் நீதி நியாயத்தையும் உறுதிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.