நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்திலிருந்து வந்த குறித்த மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயணித்த படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விசாரணைகளின் பின்னர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் காரைநகர் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்களை நேற்று அதிகாலையும் காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.