கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை.

கிழக்கு மாகாணத்திலுள்ள 700ற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இன்று வெளியிட்டுள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று காலை 10.45 மணியளவில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது அமைச்சர் உடனடியாக மேலதிக செயலாளர் ஹேமந்தவைத் தொடர்புகொண்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 445 தொண்டர் ஆசிரியர்களுக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.