மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது!

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 -ம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்றபோது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

இதையடுத்து இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், இரண்டு அதிகாரிகளும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கில் இன்று(செவ்வாய்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதிகள், அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என தீர்ப்பளித்தனர்.

மேலும், அவரே சிபிஐ இயக்குநராக தொடர்வார் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். இந்தநிலையில் இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ரஃபேல் விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தொடங்க இருந்தார்.

நள்ளிரவு ஒரு மணியளவில் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். உச்ச நீதிமன்றம் தலையிட்டு தற்போது நீதியை நிலைநாட்டியுள்ளது.

இதன் மூலம் உண்மை வெளியே வரும். ரஃபேல் விவகாரத்தில் தவறு இழைத்தவர்கள் இனிமேல் தப்பிச் செல்ல முடியாது. ரஃபேல் ஒப்பந்தத்தத்தின் மூலம், மக்களின் வரிப்பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து சந்தேகத்தின் நிழல்படாமல் தனது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தைரியம் இல்லாமல் பிரதமர் மோடி ஒடினார். ஆனால் மக்கள் மன்றத்தில் நடைபெறும் விவாதத்தில் இருந்து அவர் தப்பிச் செல்ல முடியாது“ என தெரிவித்துள்ளார்.