ஈரான் மீது புதிய தடைகளை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பாவில் படுகொலைகளை நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டின்பேரில் ஈரானின் உளவுத்துறை மற்றும் அதன் பணியாளர்கள் இருவர் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் தீவிரவாதிகள் பட்டியலிலும் இணைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கையினூடாக ஈரானிய உளவுத்துறையினதும் அதன் ஊழியர்களினதும் நிதி மற்றும் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

பல ஐரோப்பிய நாடுகளிலும் தாக்குதல்களை நடத்தியதாகவும் நடத்துவதற்கு திட்டமிட்டதாகவும் ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

டென்மார்க்கில் கடந்த வருடம் படுகொலை சதித்திட்டம் ஒன்றை ஈரானிய அரசாங்கம் முன்னெடுத்ததாக டென்மார்க் அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் பரிஸில் முறியடிக்கப்பட்டு தாக்குதல் திட்டத்தின் பின்னணியில் ஈரானிய அரசு இருப்பதில் தமக்கு எவ்வித சந்தேகமுமில்லை என பிரெஞ்சு அரசும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே ஈரான் மீது தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஈரானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகளை சேதப்படுத்தும் நோக்கமே இக்குற்றச்சாட்டுகளுக்கான காரணமென கூறியுள்ளது.