வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வவுனியா- இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கனராயன்குளத்தைச் சேர்ந்த தர்மதாசன் செல்வநாயகம் (வயது 48) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் குறித்த பகுதியிலுள்ள ஒருவர், கட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபர் உள்ளதாக கூறப்பட்ட கனகராயன்குளத்திலுள்ள வீடொன்றிற்கு சென்ற பொலிஸார், அவ்வீட்டினை முழுமையாக சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.