பாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை!

பாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் (செவ்வாய்க்கிழமை) இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்துக்கு வெளிநாட்டுக் கொள்கையென்ற ஒன்று இருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இன்று யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிகமாக பேசுகிறார்கள்.

ஆனால், இவர்கள் தான் கடந்த காலங்களில், அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை இராணுவத்துக்கு எதிராக கூட்டு பிரேணையை நிறைவேற்றியிருந்தார்கள். இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக ஐ.நாவில் கூறினார்கள்.

இப்போது இராணுவத்தை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றிவிட்டதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். இன்று நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கூட தனிப்பட்டத் தேவைக்கு இணங்கவே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், பாதாளக்குழுவினரின் நடமாட்டமும் கடந்த நான்கு வருடங்களாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதியை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் கூட, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதுதான் இலங்கையின் இன்றைய நிலைமையாகும்.” என கூறினார்.