கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது!

கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது எனவும், அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கருணா அம்மான் எனப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மைக்காலமாக வெளியிட்டுவரும் கருத்துக்களுக்குப் பதிலளித்து ஊடகங்களுக்கு (புதன்கிழமை) தெளிவுபடுத்துகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நீதி, தர்மம், நியாயம் எப்போதாகிலும் பதில் சொல்லித்தான் ஆகும். அதிலிருந்து கருணா அம்மான் தப்பிக்க முடியாது. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்.

நீதியின் முன் நிறுத்தப்படுவார். அவருக்கும் தண்டனை கிடைக்கும். வெறுமனே எங்களது நலனுக்காக நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவைக் கொடுக்கவில்லை.

எமது மக்களின் அடிப்படைத் தேவை தொடக்கம் அத்தனை பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு உதவ வேண்டும் என்றுதான் ஆதரவைக் கொடுத்திருக்கின்றோம்.

ஆகவே, கடிவாளம் எங்கள் கையில் இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கவலைப்படத் தேவையில்லை. எடுத்ததெற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்வதைவிட நாங்கள் பேசக் கூடியதைப் பேசித் தீர்க்க வேண்டும்.

அது முஸ்லிமாக, சிங்களமாக, தமிழாக இருக்கலாம் நாங்கள் முதலிலே பேசுவோம். நியாயமான தீர்வு கிடைக்கவில்லையாயின் வீதிக்கு இறங்குவோம் ஆகவே மக்கள் கவலைப்படத் தேவையில்லை.

மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நாம் முகங்கொடுக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வு நிச்சயம் கிடைக்கும்” என்றார்.