படகு சேவையினை சீராக்க துரித நடவடிக்கை!

மிரிஸ்ஸ திமிங்கில பார்வையிடல் படகு சேவையினை சீராக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மிரிஸ்ஸ சுற்றுலா வலயத்திற்கு அருகாமையில் பிரபல்யமான திமிங்கிலங்கள் பார்வையிடல் வியாபாரத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (வியாழக்கிழமை) அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில், பிரதம அமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போதே அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்கும் பொழுது பயணிகள் மற்றும் திமிங்கிலங்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனஞ்செலுத்த வேண்டும்.

படகுகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதிச்செய்யும் பொருட்டு அப்படகுகளின் வேகம், தூரம் மற்றும் ஒரு தடவையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் திமிங்கிலங்கள் பார்வையிடல் மற்றும் நீர் விளையாட்டு சங்கத்தின் அதிகாரிகள் தங்கள் உடன்பாட்டை வழங்கியுள்ளதுடன், அதனடிப்படையில் ஒரு படகில் கொண்டுச்செல்லும் பயணிகளில் சிறு படகொன்றில் 35 பயணிகளும், பெரிய படகொன்றில் 70 பயணிகளை கொண்டுச் செல்வதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

படகு சேவை வழங்குனர்களிற்கு பல விசேட சலுகைகளை வழங்கவுள்ளதோடு. அதனடிப்படையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் குறித்த அறிக்கைக்கு அமைவாக தரமான படகு சேவையினை வழங்குவதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் அலுவிஹார, வெலிகம பிரதேச ஐக்கிய தேசிய கட்சி பிரதான ஏற்பாட்டாளரும், மாகண சபை உறுப்பினருமான கயான் சன்ஜீவ உள்ளடங்கலான துறைசார் நிபுணர்கள் மற்றும் திமிங்கலங்கள் பார்வையிடல் மற்றும் நீர் விளையாட்டு சங்கத்தின் அதிகாரிகள் பலரும் பங்குக்கொண்டனர்.