இலங்கை விவகாரத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக அழுத்தம்

இலங்கையில் யுத்த காலத்தின் போது புரியப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் 2015 செப்டம்பர் இல் 30/1 என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதில் கூறப்பட்ட கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் இரண்டு வருட காலத்திற்குள் முழுமையாக நிறைவேற்றுவோம் என ஐ நா மனித உரிமைச் சபைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதியளித்திருந்தது. வழங்கப்பட்ட காலத்திற்குள் வாக்குறுதியளித்த விடயங்களை முழுமையாக நிறைவேற்ற தவறிவிட்டது. 2017 மார்ச் இல் 34/1 என்ற தீர்மானத்தின் மூலம் இலங்கை அரசிற்கு மேலும் வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.

பொறுப்பு கூறல், நீதி வழங்கல் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு நீதிப்பொறி முறையை( Hybrid Court) உள்நாட்டில் உருவாக்க தவறிவிட்டது.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை ,
இலங்கை இராணுவம் தம்வசம் கைப்பற்றி வைத்திருக்கின்ற தமிழர்களது காணிகள் முழுமையாக அவர்களிடம் திருப்பி கொடுக்கப்படவில்லை ,அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை , காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் உண்மைகளைக்கண்டறிதல் தொடர்பில் விருப்பம் காட்டாமையும் பின்னிற்கின்ற நிலைமையும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் எவ்வித நியாயமும் இல்லாமல் வேண்டுமென்றே காலந்தாழ்த்தி வருகிறது. செயல் புரிவதற்கான அரசியல் மனத்திட்பம் (Political Will) ஏதுமற்றதாக உள்ளது.

எனவே பிரித்தானிய நாடு ஐநா மனித உரிமை மன்றத்தின் சிறிலங்கா தொடர்பான 30/1, 34/1 தீர்மானங்களை கூட்டாக முன்மொழிந்த நாடுகளில் ஒன்று. அந்தவகையில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் தமிழர்கள் பெருந்திரளாகப் படுகொலை செய்யப்பட்டதற்கும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்தாக்குக்கும் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டதற்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரித்தானியாவுக்கு உயிர்நாடியான பங்குள்ளது. 

எனவே தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புக்களை ஏற்படுத்தி அவர்களது ஆதரவை திரட்டி வருகின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொகையான கொடூரங்கள் மற்றும் இனவழிப்புக்கெதிரான அமைச்சர் திரு பத்மநாபன் மணிவண்ணனின் வழிப்படுத்தலில் Human Rights Director செல்வி சோபனா ஜீவரட்ணத்தின் ஒழுங்கமைப்பில் திரு நிமல்ராஜ் விக்னராஜ் மற்றும் திரு காண்டீபன் சங்கரப்பிள்ளை ஆகிய நால்வரும் நேற்று மாலை 6.30 மணியளவில் Ruislip Rd, Greenford UB6 9QN என்ற விலாசத்தில் அமைந்துள்ள Greed ford Hall இல் North Ealing பாராளமன்ற உறுப்பினரான Stephen Pound ஐ சந்தித்து உரையாடியிருந்தனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதியில் ஐ நா மனித உரிமைச்சபையில் ஆரம்பிக்க இருக்கின்ற கூட்டத் தொடரில் இலங்கையின் செயலின்மை காரணமாக ஐ நா மனித உரிமை மன்றம் இலங்கையை ஐ நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்பி, பொதுப் பேரவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு ஐ நா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென பிரித்தானிய அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுக்குமாறும் இக்கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறும் சந்திப்பின் போது அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் தான் எப்போதும் எமக்கு ஆதரவு அளிப்பதாகவும் பிரித்தானிய பாராளமன்றத்தில் ஒரு Early Day Motion ஐ கொண்டு வருவதற்கு தான் முயற்சிப்பதாகவும் வாக்குறுதியளித்திருந்தார். இவ் விடயம் தொடர்பில் தான் பிரித்தானிய வெளியிறவுச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைப்பதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் என்று தம்மைத்தாமே கூக்கொள்கின்ற அரசாங்கத்தின் கீழ் தமிழர்களுக்கெதிராக புரியப்படுகின்ற சமகால வன்முறைகளான கைதுகள், சித்திரவதை, தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் அபகரிப்பு, தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்ற பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையான இலங்கை இராணுவங்கள் நிலை கொண்டுள்ளமை, மக்களது அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு, அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் காணாமல் போகடிக்கப்பட்டோர் விவகாரத்தில் உண்மையைக் கண்டறியும் படியும் நடத்தப்படுகின்ற போராட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்கின்ற நிலைப்பாடு போன்ற விடயங்களும் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.