இலங்கையின் நற்பெயருக்கு களங்கம்!

சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் ஒழிப்பு அலுவலகத்தை அமைப்பதானது இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச கிரிக்கெட் சபையானது ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர்களும், அவ்வமைச்சர்களைப் பாதுகாக்கின்ற கவசமாக சூதாட்டகாரர்களும் காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றினைந்து கிரிக்கெட் விளையாட்டையே முற்றாக அழித்துவிட்டார்கள்.

உலகக்கிண்ணப் போட்டிக்கு மிகச் சில காலமே இருப்பதால் எமது வீரர்களைத் தயார்ப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். இதற்கு உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதியே முன்னெடுக்க வேண்டும்.

இந்நிலையில் ஐ.சி.சி. ஊழல் ஒழிப்பு அலுவலகம் இலங்கையில் அமைக்கப்படுமானால் எமது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.