மட்டக்களப்பில் போதையில் கிருமி நாசினியை ருசி பார்த்தவர் பலி!

போதை தலைக்கேறிய நிலையில் மதியிழந்து கிருமி நாசினியைப் பருகி ருசி பார்த்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி மரணித்து விட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.‪

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள பெரியபுல்லுமலை கிராமத்தைச் சேர்ந்த புஞ்சிபண்டா ரவிச்சந்திரன் (வயது 33) என்பவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கட்கிழமை 14.01.2019 மரணித்துள்ளார்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது. இவர் கடந்த 05ஆம் திகதி போதை தலைக்கேறிய நிலையில் குடிபானம் என நினைத்து பயிர்களுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியை பருகி ருசி பார்த்துள்ளார்.

அவ்வேளையில் உளறிய நிலையில் காணப்பட்டவரை உறவினர்கள் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பித்து, முதலுதவிச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார். உடற்கூறாய்வின் பின்னர் சடலம் திங்கட்கிழமை 14.01.2019 உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.