30-1443579170-mobile-user
மற்றுமோர் இலவசம் தமிழ் நாட்டு மக்களுக்கு வந்து விட்டது. இந்த முறை இலவச கைப்பேசி, அதாவது இலவச செல்ஃபோன்.திங்கட்கிழமை தமிழக சட்டமன்றத்தில் வழக்கம் போல 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றினை வாசித்த முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா மாநிலத்தின் 6.08 லட்சம் பெண்கள் சுய உதவிக் குழுக்களின் 20,000 பயிற்றுனர்களுக்கு இலவச செல்ஃபோன்கள் வழங்கப் படுமென்று அறிவித்து விட்டார்.

இதற்கு 15 கோடி ரூபாய் செலவாகும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். தங்களது பணிகளை செவ்வனே செய்வதற்கு ஏதுவாக இந்த இலவச அம்மா கைப்பேசிகள் வழங்கப் படுவதாகவும், ஜெயலலிதா தெரிவித்தார். இந்த கைப்பேசிகளில் உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப புதிய வகை கணிப்பொறி மென்பொருள் உபயோகப் படுத்தப் படுமென்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

பெண்கள் சுய உதவிக்குழக்களுக்கான இந்த 20,000 இலவச அம்மா கைப்பேசிகள் வழங்கப் படுவது முதல் கட்டம் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இதன் பொருள் இது மேலும், மேலும் விஸ்தரிக்கப் படுமென்பதுதான்.ஆகவே தற்போது மற்றுமோர் இலவசம் தமிழக மக்களின் கரங்களில் தவழப் போகிறது. இது 2006 ல் இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டியில் ஆரம்பித்தது. இந்தப் புண்ணியத்தை செய்த முதல் பெருமையை திமுக தலைவர் கருணாநிதி தட்டிக் கொண்டு போனார். அதற்குப் பின்னர் 2011 ல் தேர்தல் அறிக்கையில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக இலவச மிக்சி, கிரைண்டர், சீலிங் ஃபேன், லேப்டாப், ஆடு, மாடு என்று அள்ளி வீசி அமோக வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. தமிழக அரசு கடந்த பத்தாண்டுகளில் இலவசங்களுக்காக மட்டும் 11,561 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது.

இது மூன்று பொருட்களுக்குமான செலவு.. அதாவது இலவச வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டிகள், லேப்டாப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றுக்கானது.இந்த தொகையைக் கொண்டு 25,000 பள்ளிக் கூடக் கட்டிடங்களையோ அல்லது 11,000 ஆரம்ப சுகாதார நிலையங்களையோ கட்டியிருக்கலாம் என்கிறார் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் பொருளாதார ஆய்வாளர் ஒருவர்.

இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு இன்று தமிழ் நாட்டில்தான் இலவசங்கள் வாரி, வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் தேவையான இலவசங்கள் என்றும் தேவையற்ற இலவசங்கள் என்றும் பகுத்துப் பார்க்கப்படும் அளவுக்கு நிலைமை இன்று மாறி விட்டது. தொலைக் காட்சிப் பெட்டிகளை தேவையான இலவசம் என்றே வாதிட்டவர்கள் மற்றவற்றை மிக்சி, கிரைண்டர், சீலிங் ஃபேன் போன்றவற்றை தேவையற்றவை என்று கூறினர்.

ஆனால் இன்று நிலைமை கையை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் அறிக்கையில் சொல்லப் படாதவற்றையும் செய்யத் துவங்கினார். அம்மா கேண்டீன்களில் ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சப்பாத்தி, சாதம் போடப்பட்டது. அம்மா மினரல் வாட்டர், அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம், பிறந்த குழந்தைகளுக்கான அம்மா கிட் ஆகியவை அறிமுகப்படுத்தப் பட்டன. அம்மா தியேட்டர் விரைவில் வரவிருக்கிறது.

இவை மலிவு விலையில் கொடுக்கப் பட்டாலும் கிட்டத் தட்ட இலவசங்களுகுச் சமமானவைதான்.இப்போதைய முக்கிய கேள்வி எத்தனை நாட்களுக்கு தமிழகத்தின் பொருளாதாரம் இந்த இலவசங்களைத் தாக்குப் பிடிக்கப் போகிறதென்பதுதான்?திமுக ஆட்சிக் காலத்திலிருந்து சொல்லப்படும் வாதம், பட்ஜெட்டில் சொல்லப் பட்டதற்கும், பற்றாக்குறைக்குமான இடைவெளி மத்திய நிதிக் குழு அனுமதித்திருக்கும் அளவிலேயே இருந்து கொண்டிருக்கிறது என்பதுதான். ஆனால் இந்த இடைவெளி மிக வேகமாக சுருங்கி வருவது என்பது உற்பத்தியில்லாத செலவினங்களுக்காக, கவர்ச்சித் திட்டங்களுக்கு எந்த அளவுக்கு தமிழக அரச செலவு செய்து கொண்டிருக்கிறது என்பதை எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

‘மாநில பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்துக்கும், மாநிலத்தின் கடன் வளர்ச்சிக்குமான இடைவெளி கிட்டத்தட்ட பூஜ்யமாக சுருங்கி விட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த இலவசங்களை, கால நிர்ணயம் செய்து தமிழக அரசு நிறுத்தியே ஆக வேண்டும்’ என்கிறார் தில்லி பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிப் பொருளாதாரத் துறையின் முதுநிலை பேராசிரியர் ஒருவர். ஆனால் யார் முதலில் இதனை துவங்கப் போகிறார்கள் என்பது வேறு கேள்வி என்கிறார் அவர்.

இது அரசியல்ரீதியில் கையில் உள்ள வெடிகுண்டு போன்றதுதான் என்றும் மேலும் அவர்.இன்று வாக்குறுதியளிக்கப்பட்ட இலவசங்களை வழங்குவதற்காக பல துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி இதற்குத் திருப்பியனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘கடந்த சில வருடங்களாகவே இலவசங்களை சமாளிப்பதற்காக சுகாதாரத்துக்கும், கல்விக்கும் தமிழகம் செலவிடும் தொகையானது நாட்டின் 17 பெரிய மாநிலங்களின் சராசரியை விடக் குறைவானதாக இருக்கிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தை நீண்ட காலத்துக்கு தூக்கி நிறுத்த சுகாதாரம் மற்றும் கல்வியில் அதிக முதலீடுகள் தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில் தற்போது இந்த முதலீடுகளுக்கு சொற்பமான தொகையே மிஞ்சி நிற்கிறது’ என்று சமீபத்திய அறிக்கையில் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.இதனிடையே அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கு 2005 லிருந்து 2013 வரையில் மூன்று மடங்காக செலவு கூடியிருக்கிறது. 2005 ல் இது ஆண்டுக்கு 8,000 கோடியாக இருந்தது தற்போது 34,000 கோடியாக உயர்ந்து நிற்கிறது.

மாநிலத்தின் பல பொதுத் துறை நிறுவனங்கள் படு மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. அரசு போக்குவரத்து கழங்கள் அநேகமாக திவாலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. சென்னைக்கு வெளியே உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுக்கப் படவேண்டிய ஓய்வூதியப் பலன்கள் கொடுக்கப்படாமலும், இரண்டாண்டுகள், மூன்றாண்டுகள் என்று தள்ளித் தள்ளியும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இலவசங்களால் தமிழக அரசின் நிதியாதாரம் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. மற்றோர் புறம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் அரசு ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் நிதிச் சுமையை பெரும் பாரமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த லட்சணத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது சம்பளக் கமிஷன் தனது அறிக்கையை வரும் டிசம்பரில் அளிக்கவுள்ளது. அடுத்த ஜனவரியிலிருந்து இதனை அமல்படுத்த வேண்டி வரும். அப்போது மாநில அரசு ஊழியர்களுக்கும் இதற்கு இணையான சம்பளத்தை கொடுக்க வேண்டியிருக்கும். இது இன்னும் அதிகப்படியான நிதிச் சுமையை தமிழக அரசு சுமக்க வேண்டிவரும்.வரும் தேர்தல் அறிக்கைகளில் எந்தெந்த இலவசங்களை எந்தெந்த கட்சிகள் வாக்குறுதிகளாக அள்ளி விடப் போகின்றன என்றே தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம்… 2016 ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் நிச்சயம் துடைத்தெடுக்கப்பட்ட காலி கஜானாவைத்தான் பரிசாகப் பெறப் போகிறார்கள்!!