ஓட்டமாவடியில் போதைப்பொருளுக்கு எதிரான பேரணி

ஓட்டமாவடியில் போதைப்பொருளுக்கு எதிரான பேரணி

ஜனாதிபதியின் போதை தடுப்பு செயலணியின் வழிகாட்டலில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

‘போதைக்கெதிரான பாடசாலையின் பலமிக்க ஆதரவு’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி கல்வியமைச்சின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் உயர் தர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு இன்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்ற குறித்த பேரணியில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், சமுர்த்தி சமூக அபிவிருத்திப்பிரிவு மற்றும் சமுதாய சீர்திருத்த திணைக்களம், வாழைச்சேனை பொலிஸார், ஓட்டமாவடி பிரதேச சபை, பிரதேச விளையாட்டுக்கழகங்கள் என பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் ஆதரவு வழங்கியிருந்தன.

மாணவர்களின் பேரணி பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி பல நோக்கு கூட்டுறவு சங்க வீதி, ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி மற்றும் பிரதான வீதி வழியாக பொலிஸ் நிலைய சந்திக்கு சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்துள்ளது.

இதன்போது பாடசாலை மாணவர்களால் பொது மக்களுக்கு போதையால் ஏற்படும் தீமைகள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், தனது வாழ்வில் ஒரு போதும் போதை தரும் பொருட்களைப் பாவிக்கமாட்டேன் என மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதி கூறி தம் அடையாளக் கையொப்பத்தினை இட்டுள்ளனர்.