இரணைமடு குளம் தொடர்பில் வடக்கு ஆளுநரின் விசேட அறிவிப்பு

இரணைமடு குளம் தொடர்பில் வடக்கு ஆளுநரின் விசேட அறிவிப்பு

இரணைமடு குளத்தின் நீரை பயன்படுத்தும் முதல் உரிமையானது கிளிநொச்சி மக்களுக்கானது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி விவசாயிகளிடம் வடமாகாண ஆளுநர் இன்று இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

யாழ். கைத்தடியில் உள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரணைமடு குள நீரினை பயன்படுத்தும் முதல் உரிமையானது கிளிநொச்சி மக்களுக்கே உள்ள போதும் யாழ்ப்பாண மக்களுக்கும் நீர் தேவையாக உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி மக்களின் தேவை போக விரயமாகும் நீரை ஏனைய நீர் தேவையுடைய மாவட்டங்களுக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும்.

இதேவேளை வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நீரை விரயமாக்காது மக்களின் தேவைக்காக முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரணைமடு குளத்தை பயன்படுத்தும் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சிறுபோக செய்கையாளர்களுக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரானது பகிர்ந்து வழங்கப்படும்.

இந்த சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி விவசாயிகள் தமது பிரச்சினைகளையும், நீர் முகாமைத்துவம் தொடர்பான கருத்துக்களையும் நீர் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் கவனத்திற்கு கொண்டு வர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.