இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தமிழ் பெண் அரசியல்வாதி!

இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தமிழ் பெண் அரசியல்வாதி!

இராணுவம்,பொலிஸாரினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச சபை உறுப்பினரொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியா – ஓமந்தை பகுதியில் தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வழிமறித்து இன்று அடையாள அட்டை உட்பட ஆவணங்களை சோதனைக்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு பிரதேச சபை உறுப்பினர் என்ற விடயத்தைத் தெரிவித்தும் தன்னை விடுவிக்காது தன்மீது சோதனை நடத்தி தனக்குரிய சிறப்புரிமையை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பிய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமாரை அப்பகுதியில் காவலில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வழிமறித்து அடையாள அட்டை உட்பட அனைத்து ஆவணங்களையும் பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து தனது கணவரினால் தான் ஒரு பிரதேச சபை உறுப்பினர் என்ற தகவலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்குத் தெரிவித்துள்ள போதிலும் இராணுவத்தினர் கேட்டுக்கொள்ளாமல் தமது சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பொதுமக்களை இவ்வாறான இராணுவத்தின் மற்றும் பொலிஸாரின் சோதனை நடவடிக்கை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளதுடன், நாட்டில் அச்ச நிலைமை தோற்றியுள்ளதாகவும், இதனால் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக ஓமந்தை, குஞ்சுக்குளம் போன்ற காட்டுப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து தீவிர சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.