இளைஞர்களின் இலட்சியப் பயணத்துக்கு உறுதுணையாக இருப்போம்!

போதையற்ற நாட்டை உருவாக்கி எதிர்கால இளைஞர்களின் இலட்சியப் பயணத்துக்கு உறுதுணையாக இருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். கந்தர்மடம் பிரதேசத்தில் அமைந்துள்ள சைவபிரகாச வித்தியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எமது பிரதேசத்தில் இடம்பெறும் ஒவ்வொரு அசம்பாவிதங்களும் எமது கலாசார சீரழிவுக்கே வழியமைக்கின்றது. அண்மைக் காலங்களில் பெருந்தொகையான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்படுகின்றமை இதனை வெளிப்படுத்துகின்றது.

பயணிக்கும் நோக்கம், திசைகள் தெரியாமலேயே பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எமது நாட்டைக் கட்டி எழுப்ப எம்மாலான முயற்சிகளை நிச்சயம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பல்வேறு நிறுவனங்களில் காணப்படும் ஆளணி வெற்றிடத்திற்கு துறைசார்ந்த கற்றல் அக்கறையீனமே காரணம். மாணவர்கள் அதனை வளர்த்து கொள்ள வேண்டும்.

பொன்னான கல்வி பயிலும் காலத்தில் சிறந்த நகர்வுகளை நோக்கி நகர்ந்தாலே இளைஞர்கள் இலட்சியங்களை நோக்கி நகரலாம்” என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.