வவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்!

வவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தின் பெயரை சப்புமல்கஸ்கந்த எனப் பெயரை மாற்றி சிங்களக் குடியேற்றத்தினை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கச்சல் சமனங்குளம் தமிழர்களின் பூர்வீக கிராமமாக காணப்பட்டதுடன் அங்குள்ள கச்சல் சமனங்குளம் மற்றும் அதனை அண்டி வாழ்ந்த வெடிவைத்தகுளம் பிரதேச மக்களும் இணைந்து விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எனினும் யுத்தம் காரணமாக வெடிவைத்தகுளம் மற்றும் கச்சல் சமனங்குளம் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்கள் வெளியேறிய நிலையில் தற்போதும் அப்பகுதியில் தமது வயல் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழலிலேயே கொக்கச்சான்குளம் என்ற தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமத்தினையும் அக்குளத்தினையும் ஆக்கிரமித்து கலாபோகஸ்வௌ என்ற பெயரில் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு தற்போது அப்பிரதேசம் சிங்கள மக்களின் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கச்சல் சமனங்குளத்தில் பௌத்த துறவியொருவர் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கும் அப்பிரதேசத்து மக்கள் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரதேசத்தினை பாதுகாத்துத் தருமாறும் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.