பொகவந்தலாவ தமிழர் குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொப்கில் வாணக்காடு தோட்டத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அனர்த்தம் இன்ற முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் லயன் குடியிருப்பொன்று எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீ விபத்தினால் 12 குடும்பங்களை சேர்ந்த 54 பேர் வரையில் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்னர்.

பொகவந்தலாவ பொலிஸார், ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும், 12 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 66 பேர் தற்காலிகமாக தோட்டத்தின் கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், நோர்வூட் பிரதேச சபையினரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை எனவும், பொகவந்தலாவ பொலிஸார், ஹட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.