இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கீரிமலை பிரதேசத்தை விடுவிக்க நடவடிக்கை!

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கீரிமலை பிரதேசத்தை விடுவிக்க நடவடிக்கை!

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வலி.வடக்கு பிரதேசத்தின் கீரிமலை பிரதேசத்தை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உறுதியளித்துள்ளார்.

கீரிமலை பூர்வீக நிலப்பகுதியின் எல்லைப் பகுதிக்கு இன்று (புதன்கிழமை) நேரடியாக கள விஜயம் மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வலி.வடக்கு பிரதேசத்தின் விடுவிக்கப்பட வேண்டியிருக்கும் நிலப்பரப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பூர்வீகமாக வழிபட்ட விஷ்ணு ஆலயம், பாரம்பரியமான சுடுகாட்டு பகுதியும் பூர்வீக கீரிமலை பிரதேசத்தினுள் காணப்படுவதாக தெரிவித்து மக்கள் தமது கோரிக்கையாக எனக்கு முன்வைத்திருந்தனர்.

அத்துடன், பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் 2 கிலோ மீற்றர் தூரம் மக்கள் பாவனை இன்றிக் காணப்படுகின்றது.

முக்கியமாக இப்பகுதியில் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளடங்குவதாக வருகை தந்திருந்த மக்கள் சார்பில் எனக்குச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனவே இவற்றினைக் கருத்திற்கொண்டு இப்பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து விரைவில் தீர்வு காணப்படும்” என அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்தார்.