இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்!

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்!

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா காணப்படுகின்றது.

இந்தநிலையில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்திலுள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கிலோமீட்டர் தென்கிழக்கே கடல் படுகைக்கு அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று மாலை சுமார் மூன்று மணியளவில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டராகவும், பின்னர், சுமார் 25 நிமிடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் 6 ரிக்டராகவும் பதிவானது.

மென்ட்டாவாய் மாவட்டத்துக்குட்பட்ட கேபுலவான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமாக உணரப்பட்ட இவ்விரு நிலநடுக்கங்களால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அத்துடன், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.