மந்திர மாந்திரீகத்திற்காக மகளின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்த தாய்!

மந்திர மாந்திரீகத்திற்காக மகளின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்த தாய்!

பிரித்தானியாவில் மந்திர மாந்திரீக செயற்பாடுகளுக்காக மகளின் பிறப்புறுப்பை சிதைத்த தாய் ஒருவரை குற்றவாளி என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

உகண்டாவை பூர்வீகமாக கொண்ட 37 வயது மதிக்கத்தக்க தாயொருவர், மாந்திரீகத்திற்காக தன்னுடைய மூன்று வயது சொந்த மகளின் பிறப்புறுப்பை சிதைத்துள்ளார்.

இவர் தன்னுடைய ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த காதலனுடன், பல வருடங்களாக கிழக்கு லண்டன் பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய மகளை லெய்டன்ஸ்டனில் வைப்பின்ஸ் கிராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருப்பதை அறிந்து சந்தேகத்துடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

இதன்போது தன்னுடைய மகள் மேலே இருந்த பிஸ்கட்டை எடுக்க முயற்சிக்கும்போது, நிலைதடுமாறி தரையில் வீழ்ந்தாள்.

அப்போது கீழே கிடந்த உலோகம் ஒன்று அவளுடைய பிறப்புறுப்பை சிதைத்துவிட்டது” என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்த ஆரம்பித்தனர்.

இதன்படி, அறுத்து எடுக்கப்பட்ட கால்நடையின் இரண்டு நாக்குகளும், வெட்டி வைக்கப்பட்ட 40 எலுமிச்சைகளையும், பெயர்களுடன் எழுதி வைக்கப்பட்டிருந்த காகிதத் துண்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் அவர் ஒரு மாந்திரீகவாதி என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.

இந்த வழக்கு நேற்று (வௌ்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாந்திரீகத்தின் மூலம் பேசவிடாமல் மாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் தான் அயலவர்கள் யாரும் இந்த சம்பவம் குறித்து பேச அஞ்சுகின்றனர் என வழக்கறிஞர் வாதாடினார்.

வாதங்கள் அனைத்தையும் கேட்டறிந்த நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், அவருடைய 43 வயது காதலனை வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.