நவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான்!

நவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான்!

ஆயிரத்து 350 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்ட நவீன ஏவுகணை ஒன்றை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

ஈராக்கில் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியின் நேற்றைய(சனிக்கிழமை) நினைவு நாளில் இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை எட்டியதாக ஈரான் பாதுகாப்பு அமைச்சர், அமிர் ஹதாமி தெரிவித்துள்ளார்.

ஹோவைஸே என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை தாழ்வாகவும் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது என அவர் கூறியுள்ளார்.

இந்த ஏவுகணையை மிக குறைவான நேரத்தில் தாக்குதலுக்கு தயார் படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், ஈரான் இவ்வாறான ஏவுகணையை பரிசோதித்துள்ளது.

அதேபோல், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரானிடம் இருந்து மசகு எண்ணையை கொள்வனவு செய்ய வேண்டாம் என, அமெரிக்கா வெளியுறவுத்துறை தமது நட்பு நாடுகளை நிர்பந்தித்து வருகின்றது.

இதேவேளை, ஈரானின் நவீன ஏவுகணை பரிசோதனை தொடர்பில் அமெரிக்க அரசு இதுவரை எந்தவித கண்டனத்தையும் வெளியிடவில்லை.

சிரியாவில் பஷர் அல் ஆசாத் தலைமையிலான ஜனநாயக அரசை நிலைநிறுத்துவதற்காக ஈரான் இராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.