தமிழரின் உரிமைகளை நசுக்குவதற்கு அரசு முயற்சி!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குவதற்கு அரசாங்கம் முயல்வதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சிவசக்தி ஆனந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது, அது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ளன. இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலிலேயே உள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், அச்சட்டத்தினை மாற்றி சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச ரீதியில் பயங்கரவாதம் தலைதூக்கி வருகின்றமையால் அத்தகைய சட்டமொன்று அவசியமெனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதன் பாரதூரத் தன்மையை அறிந்திருந்த தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட வல்லுனர்கள்கூட அமைதியாகவே இருந்துள்ளனர்.

அந்தவகையில் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கின்றோம், செயற்படுகின்றோமென மக்களிடம் கூறிவருகின்றவர்கள் இவ்விடயத்தில் அமைதியாக இருப்பது பெரும் ஐயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் குறித்த சட்டமூலத்தை, அமுல்படுத்தும் நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஜனநாயகவாதிகள், ஊடகவியலாளர்கள் முதல் சாதாரண மனிதர்கள்வரை எவராலும் குரலை உயர்த்தி பேசக்கூட முடியாத சூழல் ஏற்படப்போகின்றது” என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.