ஜனாதிபதி அனுப்பும் பெயர்களில் இருந்தே தகுதியானவர்கள் தெரிவு

ஜனாதிபதி அனுப்பும் பெயர்களில் இருந்தே தகுதியானவர்கள் தெரிவு

*சேவை மூப்பை மாத்திரம் ஒரே ஒரு அளவுகோலாக பார்ப்பதில்லை
*12 பெயர்களை நிராகரித்ததாக தெரிவிக்கும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்

ஜனாதிபதி அனுப்பும் பெயர்களிலிருந்து தகுதியானவர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு செய்யப்படுவதாகவும் தன்னிச்சையாக எந்தப் பெயரையும் அனுமதிப்பதில்லை எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர்,

தகுதியானவர்களை தெரிவு செய்கையில் எந்த வித அநீதியும் இழைக்கப்படவில்லை எனவும் சேவை மூப்பை மாத்திரம் அளவுகோலாகக் கருதி எவரும் தெரிவு செய்யப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புப் பேரவை தொடர்பில் ஜனாதிபதி சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நேற்று விளக்கமளித்த அவர்:

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கருத்தை முன்வைத்தேன்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்க ளை நியமித்தல், உயர் பதவிகளுக்கு ஜனாதிபதி பரிந்துரைக்கும் பெயர்களை அனுமதித்தல் என்பவற்றில் அரசியலமைப்பு பேரவை பின்பற்றும் நெறி முறைகள் தொடர்பாக கடந்த 2016 டிசம்பர் 8 ஆம் திகதி சபையில் ஆற்றுப்படுத்தியிருந்தேன். இந்த நெறிமுறையை மீண்டும் நாளை (இன்று) சபையில் ஆற்றுப்படுத்த இருக்கிறேன்.

ஒவ்வொரு பதவிக்கும் நபர்களை நியமிக்கையில் நெறிமுறையை மட்டுன்றி அவரின் சேவை மூப்பு, நேர்மை, சுயாதீனம், பக்கச்சார்பின்மை என்பன குறித்தும் பேரவை கவனம் செலுத்துகிறது.

பேரவையில் ஐ.தே.கவை பிரதிநிதித்துவப் படுத்தி இரு உறுப்பினர்களும் ஐ.ம.சு.மு சார்பில் மூவரும் ஜே.வி.பி சார்பில் ஒருவரும் சிவில் சமூகத்தை

பிரதிநிதித்துவப்படுத்தி மூவரும் பேரவையில் அங்கம் வகிக்கின்றனர். அரசியலமைப்பு பேரவை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பில் தெளிவுபடுத்துவது அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பாகும்.

பாரதூரமானதும் பக்கசார்பற்றதுமான பணியை செய்யும் அரசியலமைப்பு பேரவை, உறுப்பினர்களினதும் அரசியலமைப்பு பேரவையினால் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளினதும் கௌரவத்தையும் நன்மதிப்பையும் பாதுகாப்பது அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பாக கருதுகிறேன்.

தகுதியானவர்கள் தெரிவின் ​போது பின்பற்றும் நெறிமுறைகள் குறித்து கடிதம் மூலம் நான் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தேன். சிரேஷ்டத்துவம் பொருட்டாக கொள்ளப் படுவதில்லை என ஜனாதிபதி தெரிவித்த குற்றச்சாட்டு தவறாகும்.

சேவை மூப்பை மாத்திரம் ஒரே ஒரு அளவுகோலாக பார்ப்பதில்லை. ஜனாதிபதி பரிந்துரை செய்யும் பெயர்களில் இருந்தே தகுதியானவர்களை பேரவை தெரிவு செய்கிறது. தன்னிச்சையாக எந்த பெயரையும் பேரவை அனுமதிப்பது கிடையாது.

ஜனாதிபதி அனுப்பும் பெயர்களிலிருந்து தகுதியானவர்களை தெரிவு செய்கையில் எந்த வித அநீதியும் இழைக்கப்படுவதில்லை.எந்த தவறும் எமக்குத் தெரியவில்லை.

12 பெயர்களை அரசியலமைப்பு சபை நிராகரித்ததாக தெரிவிக்கும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம். ஒரு வெற்றிடத்திற்காக 3,4 பெயர்கள் அனுப்பப்படும். அதில் ஒருவரே தெரிவு செய்யப்படுவார்.

தெரிவின் போது சேவை மூப்பை மாத்திரம் அளவுகோலாக கருதுவதாக இருந்தால் அரசியலமைப்பு பேரவையொன்று அவசியமி ல்லை.19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அழுத்தங்களின்றி தகுதியானர்வர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அரசிலயமைப்பு பேரவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது.உடன்பாட்டுடனே பரிந்துரைக்கும் பெயர்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஜனாதிபதி அனுப்பிய பெயர்களில் சிலவற்றை தவிர அனேக பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலோ வேறு வகையிலோ குற்றச்சாட்டுள்ளவர்களினதும் பிரதம நீதியரசரின் பரிந்துரை அற்றவர்களினதும் நியமனங்களை நாம் அனுமதிப்பதில்லை.

எமது மனித உரிமை ஆணைக்குழுவை உலகின் தலைசிறந்ந மனிதஉரிமை ஆணைக்குழுவாக ஜ.நா பாராட்டியுள்ளது. மார்ச் மாதத்தில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் போது எமது நாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மேற்குறிப்பிட்ட துறைகளில் கிடைத்த முன்னேற்றம் நாட்டுக்கு சாதகமாக அமையும்.

ஜனாதிபதி தெரிவித்த விடயங்கள் தொடர்பில் நேரில் அவருடன் பேச விருப்பத்துடன் இருப்பதாக பலதடவைகள் அறிவித்துள்ளோம். இந்த நிலையில் சுயாதீனமான நிறுவனமொன்றை விமர்சிப்பது நாட்டுக்கு குந்தகமாக அமையும்.

ஜ.நா.முப்படை, வெளிவிவகார அமைச்சு, மனித உரிமை ஆணைக்குழு அடங்கலான சகல தரப்பினரதும் உடன்பாட்டுடன் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே மாலியிலிருந்து படைவீரர்களை மீள தருவிப்பது தாமதமானது.

அமைதிப்படைக்கு அதிகாரிகளை தெரிவு செய்யும் பொறுப்பு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக ஐ.நா பிரதிநிதி அறிவித்துள்ளார். எனவே குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் நியாயமாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.