தேசிய அரசாங்கம் பற்றி ஊடகங்கள் மூலமே அறிந்துக்கொண்டேன்!

ஐக்கிய தேசிய முன்னணி அமைக்க உள்ள தேசிய அரசாங்கம் குறித்து கட்சி தனக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாகவே தான் தகவல் அறிந்துக்கொண்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அங்கம் வகிக்காத, கட்சி கையாள முயற்சிக்கும் அணி ஒன்று இதன் பின்னணியில் உள்ளது.

இது கவலைக்குரிய விடயம். இந்த அணியிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்ற வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி எந்த காரணம் கொண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் பொது வேட்பாளரை நிறுத்தக் கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்பார்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தோளில் ஏறி சவாரி செய்ய முயற்சிக்கும் தலைவர்கள் கட்சிக்கு அவசியமில்லை எனவும் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.