வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!

வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் நெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன் வெள்ளத்தினால் விவசாயத்துக்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட அதிகாரிகள் பலநாட்களுக்குப்பின்னரே சென்றதாகவும் அதன்போது விவசாயிகள் கூறிய சேத விவரங்களை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் அமைச்சரின் கவனத்துக்கு டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கொண்டு வந்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 27/2இன் கீழ் விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி. ஹரிசனிடம் எழுப்பிய கேள்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்மையில் வடக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வரையிலான பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளன.

ஆயிரக் கணக்கில் கால்நடைகள் அழிந்துள்ளன.பல விவசாய குளங்கள் சேதமுற்றுள்ளன. விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த வீதிகள் சேதமடைந்துள்ளன.

கல்லாறு,சுண்டிக்குளம், தட்டுவன்கொட்டி போன்ற கடலோரப் பகுதிகளில் கடற்றொழில் உபகரணங்களும், படகுகளும் சேதமடைந்துள்ளன எனத் தெரிய வருகின்றன.

நெற்செய்கை அழிவடைந்திருந்தால், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் காப்புறுதி சபையால் வழங்கப்படுமென அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன.

இந்த நிலையில் சுமார் 1,500 ஏக்கர் கடலை, சுமார் 10 ஹெக்டயர் சோளம் போன்ற பயிர்ச் செய்கைகளும் ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்கைகளும் அழிவடைந்துள்ளன.

இம் மக்கள் கடந்த கால வறட்சி காரணமாக மிகுந்த தொழில் பாதிப்புகளுக்கு உட்பட்ட நிலையிலேயே விவசாய செய்கையினை மீண்டும் ஆரம்பித்திருந்த நிலையில், மேற்படி வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது என்பதால், இவர்களுக்கான இழப்பீட்டுத் தொகைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.