தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருட நினைவு!

தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருட நினைவு!- வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருட நினைவை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவினர்களால் இன்று (சனிக்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது உறவுகளுக்கு நீதி கோரி பிரதமருடன் நடத்தப்பட்ட சந்திப்பு இடம்பெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்நிலையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வவுனியாவில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்த உறவுகளை அரசின் பிரதிநிதியாக அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்.

அதன்போது பிரதமருடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதன்படி 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமருடன் சந்திப்பு இடம்பெற்றது.

ஆனால், பேச்சுவார்த்தை இடம்பெற்று இரண்டு ஆண்டுகளாகின்ற போதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்வு சாத்தியப்படவில்லை.

இந்நிலையில், ‘கூட்டமைப்பும் தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருடம் இன்று’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறு உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.